மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் மூன்றாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களிலும், குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் யூகிக்க முடியாத வகையில் அமைந்திருந்தது. இயக்குநர் ஜீத்து ஜோசப் எதிர்பாராத திருப்பங்களுடன் கதையை முடித்திருந்தார். இந்த மூன்றாம் பாகத்துடன் ‘திரிஷ்யம்’ தொடர் முழுமையாக முடிவடையும் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால், இந்த மூன்றாம் பாகம் எவ்வாறு இருக்கும், கிளைமாக்ஸ் எந்த அளவுக்கு அதிர்ச்சியளிக்கும் என ரசிகர்கள் பல்வேறு யூகங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் இரண்டு பாகங்களிலும் கீதா பிரபாகர் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் முக்கியமாக நடித்திருந்த நடிகை ஆஷா சரத், இந்த மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் கூறியதாவது, முதல் இரண்டு பாகங்களைப் போலவே, இந்த மூன்றாம் பாகத்திலும் கிளைமாக்ஸ் முழுமையாக எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது. இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
