2002ஆம் ஆண்டில் இயக்குநர் அமீர் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திரிஷா, லைலா, நந்தா உள்ளிட்ட பலர் நடித்த வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த காதல் திரைப்படம், வெளியான காலத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘மௌனம் பேசியதே’ படத்தில் தான் பேசி நடித்த ஒரு வசனத்தை மீண்டும் பேசி, நடிகர் சூர்யா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் அமர்ந்து இந்த படத்தை மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனைகள் படைத்து வரும் நிலையில், சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
