85-வது பிறந்தநாள்: நடிகர் சிவகுமாருக்கு கார்த்தி நெகிழ்ச்சியான வாழ்த்து!

திரையுலகில் பல தலைமுறைகளைக் கடந்து தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துள்ள நடிகர் சிவகுமார் இன்று தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிவகுமார், ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘சிந்து பைரவி’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘சேது’ உள்ளிட்ட 190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், குணச்சித்திர நடிகர் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், பல மாநில விருதுகளையும் பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிப்பைத் தாண்டியும் ஓவியக் கலையில் சிறந்து விளங்கும் சிவகுமார், ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ உள்ளிட்ட இதிகாசங்களை மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைக்கும் சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார். தனது 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’க்காகப் பெற்ற முழுச் சம்பளத்தையும் வங்கியில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைத்த வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் முயற்சியைத் தொடங்கினார் சிவகுமார். அந்த முயற்சியே பின்னர் கல்வி அறக்கட்டளையாக உருவெடுத்து, தற்போது 47 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தந்தையின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள கார்த்தி, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா! உங்களின் ஒழுக்கம், நேர்மை, கனிவு, அறிவு மற்றும் நீங்கள் வாழும் கண்ணியமான வாழ்க்கை முறை அனைத்துமே எல்லா வகையிலும் ஒரு பொன்னான முன்மாதிரியாகத் திகழ்கின்றன” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading