‘ரோமஞ்சம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் ஃபகத் ஃபாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘ஆவேசம்’. இந்த திரைப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஃபகத் ஃபாசிலின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, இப்படம் ரூ.150 கோடி வரை வசூலித்து, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டர் ரங்கன் என்ற கதாபாத்திரத்தை (ஃபகத் ஃபாசில்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அதன் பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளே இந்த திரைப்படத்தின் மையக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ‘இலுமினாட்டி’ பாடலின் இசையும், வரிகளும் சமூக வலைதளங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டு, இளைஞர்களிடையே வைரலானது.
இந்த நிலையில், ‘ஆவேஷம்’ படத்திற்கு இரண்டாம் பாகம் வருமா? வராதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து எழுந்து வந்தது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘ஆவேஷம் – 2’ நிச்சயமாக உருவாகும் என்று நடிகர் ஃபகத் ஃபாசில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். தற்போது, இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் முடிவடைந்த பிறகு, திட்டமிட்டபடி ‘ஆவேஷம் – 2’ திரைப்படத்தின் பணிகளை அவர் தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
