மலையாள திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘பேட்ரியாட்’. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில், குஞ்சாக்கோ போபன், பஹத் ஃபாசில் மற்றும் கதாநாயகியாக நயன்தாரா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ராணுவ பின்னணியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 23ஆம் தேதியை இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியாக அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லால் இந்த படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தற்போது முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, “ஓகே அல்ல மோனே” என்று உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
