‘மை லார்ட்’ திரைப்படம் அதிகாரத்தை பற்றிய திரைப்படம்… சசிகுமார் சொன்ன தகவல்!

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கருடன்’ மற்றும் ‘நந்தன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் அவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜப்பான்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவான ‘மை லார்ட்’ திரைப்படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். மேலும், நடிகர் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ், விஜய் மில்டன், லிங்குசாமி உள்ளிட்ட பலர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய சசிகுமார், ‘மை லார்ட்’ திரைப்படம் முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட படம் அல்ல. இதில் கோர்ட் காட்சிகள் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே இடம்பெறுகின்றன. ஆனால், இந்தக் கதை அதிகாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஒரு எளிய, கடைக்கோடி மனிதனின் கைகளில் கிடைத்தால், அவன் அதை எவ்வாறு பயன்படுத்துவான்? அந்த அதிகாரத்தின் மூலம் அவன் என்ன செய்ய முடியும்? என்பதே இந்த திரைப்படம் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும், முத்துச்சிற்பி என்ற கதாபாத்திரத்தையும்ன குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம். இந்த கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம், கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார்.

இவ்வாறான நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது மிகப்பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் அனைவரையும் மகிழ்விக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் படம் பார்த்து உண்மையாக உங்கள் கருத்தை கூறினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading