‘ஆழி’ திரைப்படம் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான முயற்சியாக இருக்கும் – நடிகர் சரத்குமார்!

மாதவ் ராமதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், இந்திரஜித், தேவிகா சதீஷ், வையாபுரி மற்றும் பிக்பாஸ் தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் குறித்து பேசிய நடிகர் சரத்குமார், “இந்தக் கதை முழுவதும் கடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் கடலில் இயக்கப்படும் ஒரு நவீன படகில் நடைபெறுகின்றன. இந்த கதையை இயக்குநர் என்னிடம் கூறியபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இப்படிப்பட்ட கதையை எவ்வாறு படமாக்குவார்கள் என்று எண்ணினேன். ஆனால், பெரிய படகு செட் அமைத்தும், நேரடியாக கடலிலும் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்த படத்தில் நான் தேவிகா சதீஷுக்கு அப்பாவாக நடித்துள்ளேன். அவர் சில காட்சிகளில் உண்மையிலேயே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். எதிர்காலத்தில் ஆக்‌ஷன் படங்களில் அவரை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிக்பாஸ் தாமரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் மாதவ் ராமதாசன் முன்பு முழுக்க முழுக்க கோர்ட் ரூமில் நடக்கும் ‘மேல் விலாசம்’ என்ற படத்தை இயக்கியவர் என்றும், அந்த படத்தில் பார்த்திபன் நடித்திருந்தார் என்றும் சரத்குமார் நினைவுகூர்ந்தார். அந்த படத்தைப் போலவே, ‘ஆழி’ திரைப்படமும் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். இன்றைய பார்வையாளர்கள் புதுமையான மற்றும் மாறுபட்ட கதைகளை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது பார்க்க ஏராளமான கன்டென்ட்கள் வந்துவிட்டன. குறிப்பாக, செல்போன் ஷார்ட்ஸ் பார்ப்பது அதிகரித்துள்ளது.

சினிமா, ஓடிடி, டிவி, ஷார்ட், ரீல்ஸ் என எதில் நடிப்பது என்று பலருக்கும் குழப்பம் இருக்கிறது. எனக்கு எல்லாமே நடிப்புதான். காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது சினிமாவின் வியாபார சூழல் முற்றிலும் மாறிவிட்டது. ஓடிடியில் விற்கப்பட்ட பிறகே பல படங்கள் தியேட்டர் ரிலீஸ் தேதியை அறிவிக்கின்றன. ஒரு படம் தியேட்டரில் வெளியான குறைந்தது ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ‘ஆழி’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்துள்ளார். கொச்சி அருகே உள்ள கடல் பகுதிகளுக்கு ஒரு குழுவுடன் நேரில் சென்று ஒலிப்பதிவு செய்துள்ள அவரது அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading