டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ‘ஐடெண்டிட்டி’, ‘நரிவேட்டை’ மற்றும் ‘லோகா’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், டொவினோ தாமஸின் நடிப்புக்கும் பாராட்டுகளை பெற்றுத் தந்தன. இதனைத் தொடர்ந்து, ‘லோகா 2’ திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இந்த படத்தில் நடிகை கயாது லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1950 காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த படம் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டொவினோ தாமஸ் மற்றும் கயாது லோஹர் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி, இப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
