ஏஆர்கே புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் பெருமாள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் பிரஜின் மற்றும் புகழ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானதும், ‘லியோ’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததுமான ஜனனி, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன், விக்ரம் விஜய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மேலும் ரவிமரியா, மைம் கோபி, தீபா அக்கா, அபிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இயக்குநர் யோகேஸ்வரன் கூறுகையில், “இந்த படம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக உருவாகிறது. பொதுவாகவே ஊருக்கு ரெண்டு ஊதாரிகள் இருப்பார்கள். ஆனால், ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரிகள் இருந்தால் என்னென்ன சுவாரஸ்யங்கள் நடக்கும் என்பதையே மையமாக வைத்து, முழு நீள காமெடி படமாக இதை உருவாக்க இருக்கிறோம். ஒரு சினிமா ரசிகன், இரண்டு மணி நேரம் தன்னை மறந்து சிரித்து மகிழ வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில், ரசிகர்களுக்கு முழுமையான என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் படமாக இது இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
ஊருக்கு ரெண்டு ஊதாரிகள்
