அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த கோப்புகளில், உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிமினல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பல முக்கிய நபர்களுடன் நடத்திய மின்னஞ்சல் உரையாடல்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அந்த மின்னஞ்சல்களில் ஒன்றில், ஒரு நிகழ்ச்சிக்காக பிரபலமான பாலிவுட் இயக்குநர் ஒருவர் வர இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, அந்த கோப்புகளில் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த தகவல்களுக்கு தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “இந்த விவகாரம் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. ஒரு மாதத்திற்கு சுமார் 15 நிகழ்ச்சிகளில் பேச அழைப்புகள் எனக்கு வரும். அவற்றில் மிகவும் சிலவற்றிற்கே நான் பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் ஒருபோதும் சென்றதில்லை. இவை அனைத்தும் சில ரேண்டம் மின்னஞ்சல்கள் மட்டுமே. அந்த மின்னஞ்சல்களே இதற்கான விளக்கத்தை தருகின்றன. என் பெயரை பற்றிய செய்திகள், என் படங்களைவிட அதிகமாக பிரபலமாக இருப்பது தான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.
