இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சினிமா உலகில் தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது சினிமா பயணத்தில் இதுவரை 20 படங்களை அவர் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற இசை நிகழ்ச்சியை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவருடன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு உரையாடலில் அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்களின் தொகுப்பாக இந்த உரையாடல் அமைந்துள்ளது.
அமைதியான முறையில் ஒரு இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது குறித்து பேசிய கவுதம் வாசுதேவ் மேனன், “இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மனதில் இருந்தது. ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தொடர்ந்து அதை ஒத்திவைத்துக்கொண்டே வந்தேன். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, இதை இனிமேல் ஏன் தள்ளிப் போட வேண்டும் என்ற எண்ணம் திடீரென வந்தது. அதனால், அவசரமாக ஒரு ‘பிரைவேட் ஃபங்க்ஷன்’ போல இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இதில் சூர்யா, ஜோதிகா, தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன், லிங்குசாமி, சசி, அருண் விஜய் உள்ளிட்ட மிகக் குறைந்த நபர்களை மட்டுமே அழைத்திருந்தேன். நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இனி இதை இன்னும் பெரிய அளவில் நடத்தலாம் என்ற எண்ணமும் உள்ளது” என்று தெரிவித்தார்.
தன் படங்களில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்கள் வெற்றிபெறுவதற்கான காரணம் குறித்து விளக்கிய அவர், “என் அம்மாவுக்கு பாடல்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு சினிமாவுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், 50, 60-களில் வந்த பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்லுவார்கள். அந்தப் பாடல் எந்த படம், யார் பாடிய பாடல் என்பதையும் துல்லியமாக கூறுவார்கள். அதைப் பார்த்தே எனக்கும் பாடல்களை ரசிக்கும் பழக்கம் வந்தது. நான் சினிமா பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்த ரசனை எனக்குள் வளர்ந்தது. இன்றும் எந்த பழைய பாடலை கேட்டாலும், அது எந்த படம், யார் பாடிய பாடல் என்பதை சொல்லும் அளவுக்கு பழக்கம் இருக்கிறது. இந்தப் பாடல் ரசனையே என் படங்களின் இசை வெற்றிக்கு அடிப்படையாக இருக்கலாம்” என்றார்.
மேலும், “திரைக்கதை எழுதும் போது, இந்த இடத்தில் ஒரு பாடல் தேவை என்று தோன்றினால், அதை சாதாரணமாக விட்டுவிட மாட்டேன். அந்தப் பாடலில் எந்த மாதிரியான உணர்வு, எந்த வகையான வரிகள் வர வேண்டும் என்பதைக் குறித்து என் குழுவுடன் விரிவாக ஆலோசிப்பேன். அதன் பின்னரே பாடலாசிரியர் தாமரையிடம் அதை விவரிப்பேன். ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ பாடலும் இப்படித்தான் உருவானது. ஒரு பாடலுக்காக இவ்வளவு கவனம் செலுத்துவதுதான் அதன் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய கவுதம் வாசுதேவ் மேனன், “ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா போன்ற இசை மேதைகளுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்று பொதுவாக சொல்ல மாட்டேன். அந்த பாடலின் உணர்வு, வரிகள், அது வரும் இடம், பாடல் தேவைப்படுகிறதா வேண்டாமா என்பதுவரை விரிவாக விவாதிப்போம். அதன் பின்னரே இசை அமைக்கும் பணிகள் தொடங்கும். இதுவரை நான் இயக்கிய 20 படங்களில் ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் மட்டுமே பாடல்கள் இல்லை. மற்ற படங்களில் மொத்தம் 85 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 45 பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பெரும்பாலும் அவர்களின் முதல் ட்யூனையே நான் ஏற்றுக்கொள்வேன். அந்தப் பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுவது என் அதிர்ஷ்டம்” என்றார்.
நடிப்பு பயணம் குறித்து பேசிய அவர், “இனி அதிகமாக நடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு காலகட்டத்தில் அது தேவையாக இருந்தது. இப்போது போதுமென்று தோன்றுகிறது. நான் அடிப்படையில் இயக்குநர்தான். சில இயக்குநர்கள் அழைத்ததால் மறுக்க முடியாமல் நடித்தேன். சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நடித்தேன். ஆனால் பல சமயங்களில் ‘இதை ஏன் செய்கிறேன்?’ என்று எனக்குள்ளேயே தோன்றியது. அதனால் இனிமேல் என்னை நடிகராக அதிகம் பார்க்க முடியாது” என்றார்.
சரித்திரம், புராணம் போன்ற கதைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “அப்படியான கதைகளை இன்றைய சூழலோடு இணைக்கும் எண்ணம் இருக்கிறது. தற்போது என்னிடம் ஒரு காதல் கதை உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற இளம் நடிகர் இல்லை. இன்றைய நடிகர்கள் ஒரு படம் வந்தாலேயே சூப்பர் ஸ்டார்களாகிவிடுகிறார்கள். அவர்கள் காதல் கதைகளில் நடிக்க விரும்பவில்லை. ஜெயமோகன் எழுதிய ஒரு கதையும் என்னிடம் உள்ளது. ஆனால் அதற்கு பல விஷயங்கள் சரியாக அமைய வேண்டும்” என்று கூறினார்.
பெண் கதாபாத்திரங்கள் குறித்து பேசிய கவுதம் வாசுதேவ் மேனன், “என் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் இயல்பாக எழுதப்பட்டவை. நான் வாழ்க்கையில் சந்தித்த பெண்களிடமிருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்தான் அவற்றை உருவாக்கினேன். ‘காக்க காக்க’ படத்தில் மாயா கதாபாத்திரத்தில் என் அம்மாவின் சாயல் இருந்தது. ‘வேட்டையாடு விளையாடு’ ஆராதனா கதாபாத்திரம் எனக்குத் தெரிந்த ஒருவரை அடிப்படையாகக் கொண்டது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸி கதாபாத்திரம் என் அண்டை வீட்டில் இருந்த ஒருவரின் சாயல்தான். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சமீரா ரெட்டி நடித்த கதாபாத்திரம் என் கல்லூரி கால நண்பரை நினைவுபடுத்தியது. ஆண் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் என்னையே பிரதிபலிப்பவை” என்றார்.
ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், “கிரியேட்டிவ் பணிகளில் ஏ.ஐ பல வகையில் உதவுகிறது. நிறைய யோசனைகள் கிடைக்கின்றன. ஆனால் முழுமையாக அதன்மீது நம்பிக்கை வைக்க முடியாது. ஒரு நடிகரின் பங்களிப்பை ஏ.ஐ மாற்ற முடியாது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கிளைமாக்ஸ் ஹீரோவின் நடிப்பைப் பொறுத்தே முடிவு செய்யப்பட்டது. அந்த உணர்வை ஏ.ஐ மூலம் உருவாக்க முடியாது” என்று விளக்கினார்.
25 ஆண்டுகால பயணம் குறித்து கூறிய அவர், “இந்த பயணம் எனக்கு மகிழ்ச்சியானது. பெரும்பாலான முடிவுகளை நானே எடுத்தேன். எனக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது ‘துருவநட்சத்திரம்’ திரைப்படம் மட்டும்தான்” என்றார். தனது மிகப்பெரிய வெற்றி குறித்து பேசுகையில், ‘மின்னலே’ தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அந்தப் படத்தின் வெற்றியால்தான் எனக்கு ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் என் தொடக்கமே என் மிகப்பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டார்.
