காரைக்குடியில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் கேரளா நோக்கி பயணித்தபோது நடிகர் மம்மூட்டிக்கு வழிகாட்டி உதவிய தமிழக ரசிகர் பாண்டியனின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் வழி தெரியாமல் தவித்த மம்மூட்டியின் காருக்கு அதிகாலை 3.30 மணியளவில் அந்த ரசிகர் தனது பைக்கில் முன்சென்று வழிகாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், தமிழக ரசிகரை மம்மூட்டி அன்புடன் ‘நம்ம ஃபிரெண்டு’ என்று குறிப்பிடுகிறார். மேலும், பாண்டியனின் பைக்கை பின்தொடர்ந்து செல்லும்போது மம்மூட்டி பாடல் பாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகதேவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் மம்மூட்டி, ஆன்டோ ஜோசப், ரமேஷ் பிஷாரடி, ஜார்ஜ் மற்றும் ஓட்டுநர் உன்னி ஆகியோர் காரில் கேரளாவுக்கு புறப்பட்டனர்.
திருப்பத்தூர் அருகே சென்றபோது சாலையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவர்கள் மாற்றுப்பாதையைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூகுள் மேப் உதவியுடன் பல வழிகளில் சென்றபோதும் சரியான பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றியதால் சோர்வடைந்த மம்மூட்டி, மீண்டும் காரைக்குடிக்கு திரும்பிவிட்டு மறுநாள் பயணத்தை தொடரலாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பட்டமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அவர்கள் காரை நிறுத்தி வழி விசாரித்துள்ளனர். அங்கு இருந்த இளைஞர் ஒருவர் சில பாதைகளைச் சுட்டிக்காட்டியபோதும், அவையும் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த மற்றொரு இளைஞர் வந்து காருக்குள் பார்த்தபோது, அதில் இருப்பது மம்மூட்டி என்பதை அடையாளம் கண்டுள்ளார்.உடனடியாக அந்த ரசிகர் உற்சாகத்துடன் மம்மூட்டியிடம் பேசி, “என்னை ஃபாலோ செய்ங்க” என்று கூறி தனது இருசக்கர வாகனத்தில் முன்னே சென்றுள்ளார். கூகுள் மேப்பில் இல்லாத குறுக்கு வழிகள் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் பயணித்து மம்மூட்டியின் காரை நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்று வழிகாட்டியுள்ளார்.
நெடுஞ்சாலையை அடைந்ததும் கேரளாவுக்குச் செல்லும் வழியை பாண்டியன் சுட்டிக்காட்டி விடைபெற்றுள்ளார். அவரது உதவியை பாராட்டிய ரமேஷ் பிஷாரடி, இந்த சம்பவத்தை மம்மூட்டி சந்தித்ததை யாரும் நம்ப மாட்டார்கள் என நகைச்சுவையாக கூறியுள்ளார். இதையடுத்து மம்மூட்டி காரிலிருந்து இறங்கி பாண்டியனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அவரை அன்புடன் அணைத்துக்கொண்டு பெயரையும் கேட்டுள்ளார். பாண்டியன் என அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், அவரது உதவியை பாராட்டிய ரமேஷ் பிஷாரடி, இந்த ரசிகர் பான்-இந்தியா அளவில் பிரபலமாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
