தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவரது 34-வது திரைப்படமாக உருவாகி வரும் படம் கராத்தே பாபு. டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே. பாபு இந்த படத்தை இயக்கும் நிலையில், ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ரவி மோகன், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கராத்தே பாபு படத்தில் கே.எஸ். ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான கராத்தே பாபு படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வருகிற கோடைக்காலத்தில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
