இசையமைப்பாளர் இளையராஜா தனது இசையின் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அவர் இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான ‘வேலியன்ட்’ சிம்பொனியை, கடந்த ஆண்டு லண்டனில் அரங்கேற்றி உலக இசை ரசிகர்களை வியக்க வைத்தார்.
இதன் மூலம், சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் இளையராஜா பெற்றார். இந்த சாதனைக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தனது அடுத்த சிம்பொனியை எழுதப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், பிப்ரவரி 3, 2026 அன்று, இந்த புதிய ஸ்டுடியோவிற்கு வந்து சரியாக 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும், எனது இரண்டாவது சிம்பொனியின் எழுதும் பணியும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், இரண்டாவது சிம்பொனியையும் விரைவில் முடித்து, அதை அரங்கேற்றி மேலும் ஒரு சாதனையை அவர் நிகழ்த்த உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
