சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துத், இரா.சரவணன் எழுதி இயக்கிய திரைப்படம் ‘நந்தன்’. இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருந்த இந்த படம், பட்டியலின மக்களின் ஊராட்சி மன்றத் தேர்தல் அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. விமர்சகர்கள் தரப்பில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
இந்த சூழலில், ‘நந்தன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இயக்குநர் இரா.சரவணன் தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ‘முழுமையாக “நந்தன்” படம் குறித்தே விவாதித்தோம். “நந்தன் 2” படத்தை உருவாக்க மூவரும் தயாராக இருக்கிறோம். விரைவில் மகிழ்ச்சியான செய்தி வெளியாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற இரா.சரவணன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், ‘இரா.சரவணன் என் உயிர் நண்பன். என் வாழ்க்கையின் கடினமான காலங்களில் அவர் எனக்கு துணையாக இருந்தவர். அவருக்காக உயிரையே கொடுக்க தயங்கமாட்டேன். ஒரு படம் கொடுக்க மாட்டேனா?’ என உணர்ச்சிப்பூர்வமாக பேசியது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
