நடிகர் தனுஷின் 54வது திரைப்படமாக ‘கர’ உருவாகியுள்ளது. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘அமரன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது தனுஷின் 55வது படமாகும். இந்த படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தில், கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மம்முட்டி இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மம்முட்டி நடித்த ‘கம்மத் அண்ட் கம்மத்’ என்ற மலையாள படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், இது இருவரும் இணைந்து முழு நீளமாக நடிக்கும் முதல் திரைப்படமாகும்.
‘இந்த கதையை மம்முட்டி தேர்வு செய்த தருணமே, அது சரித்திரமாக மாறிவிட்டது’ என்று படக்குழு குறிப்பிட்டு, அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
