கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, 2017ஆம் ஆண்டிலேயே வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் படம் வெளியாகவில்லை. அதன் பின்னர் பலமுறை வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியானாலும், ஒவ்வொரு முறையும் படம் திரைக்கு வராமல் போனது. இதனால், இந்த ஆண்டாவது படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து விரிவாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த படத்தை முதலில் சூர்யாவை வைத்து தான் தொடங்கினேன். அதன் பிறகு விக்ரமை வைத்து படத்தை முழுமையாக இயக்கி முடித்தேன். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக ‘துருவ நட்சத்திரம்’ உருவாகியுள்ளது. பைனான்ஸ் தொடர்பான சிக்கல்கள் காரணமாக தான் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இந்த பிரச்னைகளை சரிசெய்ய எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது இறுதிகட்ட பிரச்னைகளையும் சரி செய்து வருகிறேன். இன்னும் இரண்டு வாரங்களில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என நம்புகிறேன். இந்த படத்தை வெளியிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, நான் வேறு எந்த புதிய படத்தையும் இயக்காமல் இருக்கிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பும், அவர்கள் அளிக்கும் ஆதரவும் தான் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக உள்ளது” என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
