தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பாவனா, தனது 90வது திரைப்படமாக ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் படங்களின் கட்டமைப்பைத் தாண்டி, ‘பேரலெல் இன்வெஸ்டிகேஷன்’ என்ற தனித்துவமான விசாரணை முறையை மையமாக கொண்டு, த்ரில்லர் திரைக்கதை இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், கூர்மையான புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவர் வெளிப்படும் விதம், படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கு முக்கியமான வலுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் பாராட்டுகளை குவித்த நடிகர் ரஹ்மான், இந்த படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்து மலையாள சினிமாவிற்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவரது கதாபாத்திரம் கதையின் நகர்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
