தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஹிந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தி நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நடிகை ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா மும்பையில் வீடு வாங்கி அங்கே குடியேறியுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2024ஆம் ஆண்டில், ஹிந்தி திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில், மகாபாரதக் கதையை தழுவி உருவாக இருந்த ‘கர்ணா’ என்ற திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ், ‘கர்ணா’ படம் குறித்து முதன்முறையாக விரிவாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘கர்ணா’ திரைப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாகவும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். திரைக்கதை எழுத்துப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் தருவாயில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறினார். இருப்பினும், இந்த படம் முற்றிலும் கைவிடப்படவில்லை என்றும், மேலும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஆறு பாடல்களை இசையமைத்து வைத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
