2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டு வரை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் வழங்கும் விழா, அடுத்த மாதம் 13 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில், சமூக சிந்தனைகளையும் மனிதநேய உணர்வுகளையும் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கும் சின்னத்திரை விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்பு வழங்கப்படாமல் இருந்த அனைத்து விருதுகளையும் முழுமையாக வழங்க வேண்டும் என ஆணையிட்டார். அதன் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறை கலைஞர்களுக்கும், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகள் 101 சின்னத்திரை கலைஞர்களுக்கும், 2008–2009 கல்வியாண்டு முதல் 2013–2014 கல்வியாண்டு வரை வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 30 மாணவர்களுக்கும், 2022 செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 34 விருதாளர்களுக்கும், 2014–2015 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 5 விருதாளர்களுக்கும், 2024 மார்ச் 6 ஆம் தேதி சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, 2016 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரை தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 2014 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரையிலான சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விருதுகளும், 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டு வரை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையின் அடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சின்னத்திரை விருதுகளுக்காக, நடிகர்கள் எம். ராஜ்குமார், ஆர். பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ. சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சிறந்த கதாநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடிகைகள் ஆர். ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சிறந்த கதாநாயகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கு சிறப்பு பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சின்னத்திரை விருதுகளில், சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. ஆண்டின் சிறந்த சாதனையாளருக்கும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து விருதுகளும் முதல்வரின் ஆணைப்படி, 13.2.2026 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி கௌரவிக்க உள்ளார் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
