மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற 11-வது அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான மிக உயரிய ‘பத்மபாணி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இளையராஜாவை பாராட்டினர். உலக அளவில் அவரது இசைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பின்னர் பேசிய இளையராஜா, இந்த விழாவிற்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் தனது 1,541-வது திரைப்படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துவிட்டு வந்ததாக தெரிவித்தார். பலர் தன்னிடம் எவ்வாறு தொடர்ந்து துல்லியமான மெட்டுகள் மற்றும் பாடல்களை உருவாக்குகிறீர்கள் என்று கேட்பதாகவும், அதற்கு தனது பதில் ஒன்றே என்றும் கூறினார். “எனக்கு இன்னும் இசை முழுமையாகத் தெரியாது. ஒருவேளை இசையை முழுவதும் கற்றுவிட்டேன், தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று நான் நினைத்திருந்தால், இந்நேரம் வீட்டிலேயே முடங்கியிருப்பேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருப்பதால் தான் இன்றும் நான் தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், 1968-ம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய காலத்தில் இன்றைய தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லை என்றும், தற்போது கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஆனால், நேரடி வாத்தியங்கள் தரும் உணர்வை எந்திரங்களால் வழங்க முடியாது என்பதால், இன்றளவும் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனித்தனியாக நோட்ஸ்களை எழுதி, லைவ் ஆர்கஸ்ட்ராவையே பதிவு செய்து வருகிறேன் என்றார். இதற்கு முன்பாக, விழா தொடக்கத்தில் விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
