இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. இந்தப் படத்தின் தலைப்பு அறிவிப்பு நிகழ்வு ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. அதன் பின்னர், படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்தப் படம் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், வாரணாசி எனப்படும் பனாரஸ் அல்லது காசி மாநகரில் உள்ள பல இடங்களில் ‘In Theaters’ என்றும் ‘April 7, 2027’ என்றும் குறிப்பிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள் ‘வாரணாசி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை முன்னறிவிப்பதற்காக வைக்கப்பட்டவை என்ற பேச்சு டோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. முதலில் தேதி மற்றும் தகவலை மட்டும் வெளிப்படுத்தி, பின்னர் அதில் படத்தின் பெயரை இணைப்பது போன்ற ஒரு வித்தியாசமான விளம்பர யுக்தியை படக்குழு கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தெலுங்கு புத்தாண்டான ‘யுகாதி’ பண்டிகை வருவதால், ஆன்மிக பின்னணியுடன் உருவாகும் ‘வாரணாசி’ படத்தை வெளியிட இதைவிடச் சிறந்த நாள் இருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே அந்த தேதியைத் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்மிகம், ஆக்ஷன் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான படமாக ‘வாரணாசி’ உருவாகி வருவதாகவும், அதன் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
