தமிழ் சினிமாவின் மூத்த நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இளம் வயதில் சினிமாவில் பயணத்தை தொடங்கிய காலத்தில் இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும், அதன் பின்னர் தனித் தனியே கதாநாயகர்களாகவே தொடர வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே படத்தில் இணைந்து நடிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்றாக நடிக்கும் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே விவாதமாக இருந்து வந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அந்தப் படத்தை தான் இயக்கப் போவதில்லை என்று தெளிவாக கூறி விட்டார். இதனைத் தொடர்ந்து, தற்போது அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பதைத் தேர்வு செய்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வரும் நெல்சன் தான் ரஜினி – கமல் இணையும் இந்தப் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் கூறிய கதை இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பட அறிவிப்புக்கான ஒரு வீடியோ முன்னோட்டத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாகவும், அந்த அறிவிப்புக்குப் பிறகு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு தான் முழு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
