ரஜினிகாந்த், ஷோபனா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தின் பிரபலமான காட்சியை இயக்குநர் அனில் ரவிபுடி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் க்ரித்தி ஷெட்டியுடன் இணைந்து நகைச்சுவையாக ரீ-கிரியேட் செய்துள்ளார்.இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷும் க்ரித்தி ஷெட்டியும் இணைந்து பாடலுக்காக ரீல்ஸ் செய்யத் திட்டமிடுகின்றனர். அப்போது தன்னை அதில் சேர்த்துக்கொள்ளாததால் அனில் ரவிபுடி வருத்தப்படுவது போன்ற காட்சிகள் நகைச்சுவையாக இடம்பெற்றுள்ளன.
‘ஜனவரி 12 விடுதலா’ படத்தின் இசை வெளியீட்டு புரமோஷனைத் தொடங்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 20-ம் தேதி முதல் இசை தொடர்பான நிகழ்வுகள் தொடங்கும் என்றும், முதல் பாடல் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ‘புரமோஷன் என்றாலே அனைவருக்கும் முன்பாக வந்துவிடுவோம்’ என்ற வாசகத்துடன் படக்குழு வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
