தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலுவைத் திருமணம் செய்துகொண்ட அவர், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘ராமாயணா’ படத்தில் யாஷுக்கு ஜோடியாக ராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கமல்ஹாசனுடன் அவர் நடித்துள்ள ‘இந்தியன் 3’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்துப் பேசிய காஜல், “நான் சினிமாவுக்கு வருவேன் என்று பெரிய அளவில் கனவு கண்டதில்லை. ஒரு கட்டத்தில் அது நடந்தது. ரசிகர்களின் அன்பாலும் வரவேற்பாலும் தொடர்ந்து படங்களில் நடித்தேன். பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது முக்கியமான தருணம். அந்த அனுபவத்தைக் கடந்து நானும் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கிறேன். நடிகைகளுக்குத் திருமணமானதும் அவர்களது சினிமா மார்க்கெட் முடிந்துவிட்டதாகப் பேசுவார்கள். அது மிகப்பெரிய சவால்தான். அதை நான் கடந்து வந்துள்ளேன்.
சினிமாவில் நடிகர்களைவிட நடிகைகளுக்குத்தான் அதிக சவால்கள் காத்திருக்கின்றன. விமர்சனங்களும் எளிதில் நடிகைகளை நோக்கிப் பாயும். அவற்றைக் கடந்து தைரியமாகப் பயணித்தால்தான் வெற்றியை அடைய முடியும். வயதையோ வேறு காரணங்களையோ சொல்லி யாராலும் நமது திறமையைத் தடுத்துவிட முடியாது. விமர்சனங்களுக்கு அஞ்சாமல் திறமை மீது நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும் என்பதுதான் நடிகைகளுக்கு நான் சொல்ல விரும்புவது” என்று தெரிவித்துள்ளார்.
