‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் சான்றிதழ் வழக்கை வாபஸ் பெறும் கேவிஎன் நிறுவனம்?

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை வாரியம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீடு தொடர்பான விசாரணை நடைபெற்று, இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தணிக்கை வாரியத்திற்கு போதிய அவகாசம் அளித்து வழக்கை தொடர்ந்து தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அந்த தீர்ப்பின் முழு விவரமும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கு முடிவுக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும் என்றும், அதன் பின்னர் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கே கூடுதலாக சில வாரங்கள் தேவைப்படும் என்றும் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, வழக்கை வாபஸ் பெறும் யோசனையிலும் அவர்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வழக்கு வாபஸ் பெறப்பட்டால், தணிக்கை வாரியம் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பும். அவர்கள் படத்தை பார்த்து தெரிவிக்கும் ‘கட்’களை சரி செய்து அளித்தால் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும். அதிகபட்சமாக இதற்கு ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும், படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகளை வாங்கிய நிறுவனங்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. தியேட்டர் வெளியீட்டுத் தேதியை அடிப்படையாகக் கொண்டே ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமைகள் உயர்ந்த விலையில் வாங்கப்படுகின்றன. விஜய் நடித்த படம், அதுவும் அவரது கடைசி படம் என்பதால், அந்த உரிமைகளுக்கான முழுத் தொகையும் முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்கும். வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போனால், அந்த நிறுவனங்களுக்கே பெரிய நஷ்டம் ஏற்படும். ஒப்பந்தத்தின் படி தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீட்டுத் தேதிகள் பின்பற்றப்படாவிட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உட்பிரிவும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, மிக விரைவில் ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading