தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அயலான்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகிலும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து நடித்து வந்த அவர், தற்போது பாலிவுட் சினிமாவில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டில் அறிமுகமான ஆரம்ப காலங்களில் தான் சந்தித்த அவமானங்களையும் சவால்களையும் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் சினிமா துறையில் நுழையும்போது, மக்களிடம் அறிமுகமாகவும் வாய்ப்புகளை பெறவும் அதிக நேரமும் பொறுமையும் தேவைப்படும். பாலிவுட் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நேரடியாக அணுகுவதற்கு கூட பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சில நேரங்களில் பாலிவுட்டில் உள்ள ஆடிஷன் இயக்குநர்கள் தன் அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட அனுபவங்களும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புதியவர்கள் சினிமா துறைக்குள் நுழைய முயற்சிப்பதால், ஆரம்ப காலம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார். எனவே, சினிமாவுக்குள் புதிதாக வர விரும்புபவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடும் என்ற தவறான நம்பிக்கையில் இருக்கக் கூடாது என்றும், கடின உழைப்பும் மன உறுதியும் மிக அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். இறுதியில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைத்தே பயணிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
