ஹிந்தி திரையுலகில் 2006 ஆம் ஆண்டு, ஷாருக்கான் நடிப்பில், பர்ஹான் அக்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமாக ‘டான் 2’ 2011 ஆம் ஆண்டு, அதே பர்ஹான் அக்தர் – ஷாருக்கான் கூட்டணியில் வெளியானது. அந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், தற்போது ‘டான்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் இயக்குனர் பர்ஹான் அக்தர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
‘டான் 3’ படத்திற்காக, ஏற்கனவே பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடிக்க இருந்த ‘ஜி லீ ஜாரா’ திரைப்படத்தையும் அவர் தற்காலிகமாக கைவிட்டார். அதே நேரத்தில், ‘டான் 3’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றி, ரன்வீர் சிங்கின் சினிமா முடிவுகளை மாற்றியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, ரன்வீர் சிங் திடீரென ‘டான் 3’ திரைப்படத்திலிருந்து விலகி விட்டார். இந்த படத்திற்கு ரன்வீர் சிங் மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த பர்ஹான் அக்தர், அவர் விலகியதால் தற்போது ‘டான் 3’ திட்டத்தை தற்காலிகமாக ஓரம் கட்டி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, முன்பு கைவிடப்பட்டிருந்த பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘ஜி லீ ஜாரா’ திரைப்படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
