‘ஹாட்ஸ்பாட் 2’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தற்போது ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பு, ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுரி கிஷன் நடித்த ‘அடியே’ திரைப்படத்தை இயக்கியிருந்த அவர், தற்போது இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
‘ஹாட்ஸ்பாட் 2’ திரைப்படத்தில், ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன்பாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திட்டம் இரண்டு’, அசார் நடித்த ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கலை’ ஆகிய படங்களை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில், ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கலை’ படத்தை தயாரித்தவர் ரெஹைனா என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஜி.வி.பிரகாஷின் தாயார் என்பதால், இயக்குநருக்கும் ஜி.வி.பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையேயான நட்பு தொடர்ந்து வருகிறது. மேலும், தனது ஒரு படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்பதும் விக்னேஷ் கார்த்திக்கின் நீண்ட நாள் கனவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘ஹாட்ஸ்பாட் 2’ தொடரில் பெண்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும், ஆடை சுதந்திரம் குறித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்றும் சில பெண்ணியவாதிகள் விமர்சனம் முன்வைத்துள்ளனர். இதற்கு பதிலளித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “படத்தின் சில காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு இப்படியாக விமர்சிக்கிறார்கள். முழு படத்தையும் பார்த்த பிறகு பேசட்டும். அதற்குப் பிறகும் குறை சொன்னால் அது அவர்களின் உரிமை, அவர்களின் கருத்து. நான் என் எண்ணத்தின் படி படம் எடுப்பதும் என் உரிமை, என் கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
