எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ என்ற நாவல், முதலில் ஒரு வார இதழில் தொடராக வெளியானது. பின்னர் அந்த நாவல் தனி நூலாகவும் வெளியிடப்பட்டது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் என அழைக்கப்படும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு எதிராக, மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த வேளிர் குலத் தலைவன் பாரி மேற்கொண்ட போராட்டமே இந்த நாவலின் மையக் கதையாக அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று புனைவுக் கதையாகும்.
இந்த நாவலை திரைப்படமாக உருவாக்க இருப்பதாக இயக்குநர் ஷங்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். கொரோனா காலகட்டத்திலேயே இதற்கான திரைக்கதையை எழுதி முடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், அந்த படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களும் படுதோல்வியை சந்தித்தன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், ‘இந்தியன் 3’ படத்தின் தற்போதைய நிலை குறித்தும் தெளிவான தகவல் இல்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ‘வேள்பாரி’ திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். இந்தப் படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாகவும், படத்தின் சரியான பட்ஜெட், நிர்ணயிக்கப்பட்ட படப்பிடிப்பு நாட்கள், அவற்றை மீறாமல் படம் உருவாக வேண்டும் என்ற உத்தரவாதம் ஆகியவற்றை ஷங்கர் தரப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. பொதுவாக, ஷங்கர் படம் என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அனைத்து தகவல்களும் யூகங்களாகவே இருக்கும். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது விரைவில் தெரிய வரும்.
