ராஜு ஷெரேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெளவல்ஸ் : அன் அட்லஸ் ஆப் லவ்’. இந்த படத்தில் சம்யுக்தா விஷ்வநாதன், விஜயஸ்ரீ, காஜல் சவுத்ரி, சித்து குமரேசன் மற்றும் விஜ்யேதா வசிஸ்ட் ஆகிய ஐந்து நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து, பரத் போபண்ணா, ஷரத் ரவி, பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர், அருள் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். இசையமைப்பை சரவண சுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார்.
படம் குறித்து தயாரிப்பாளர் பேசும்போது, “இதுவரை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளாத ஆழமான ஐந்து காதல் கதைகள், ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல். காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக இது உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலிலிருந்து ஆசை வரை, உணர்வுகளிலிருந்து அவற்றுக்கு அடிபணிவது வரை என இனிமையும் ஆபத்தும், தியாகமும் கொடூரமும், மாயையும் இருளும் ஆகிய காதலின் இருபக்கங்களையும் இந்த திரைப்படம் விரிவாக பேசுகிறது.
இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்தும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் போன்ற அனைத்து உணர்வுகளும் ஒன்றிணைந்து, காதலை ஒரு அழகான மொழியாக சித்தரிக்கின்றன. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
