கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகர் சித்தார்த், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘3 பிஎக்கே’ திரைப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கவனம் ஈர்த்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, சித்தார்த் தற்போது இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. ‘டக்கர்’ திரைப்படத்திற்கு பிறகு, சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி. கிரிஷ் மீண்டும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.
இந்த புதிய படத்தில் கதாநாயகியாக ராஷி கன்னா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரவுடி அண்ட் கோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
