ரீ ரிலீஸாகிறதா சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ?

சரவணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘சிலம்பாட்டம்’. 2008-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஷனாகான், சினேகா, பிரபு, சந்தானம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம், வெளியான காலத்தில் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்றது. தற்போது, சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தற்போது ரீ-ரிலீஸ் சீசன் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிம்புவின் இந்த படத்தையும் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத் தரத்துடன், புத்தம் புது பொலிவில் மீண்டும் வெளியிட தயாராகியுள்ளனர். இந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளும், நடிகை சினேகாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் அந்த காலத்தில் பேசப்பட்ட அம்சங்களாக இருந்தன. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தன.

கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் ‘படையப்பா’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜயின் ‘சச்சின்’ போன்ற திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படமும் ரீ-ரிலீஸில் ஹிட்டாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ திரைப்படமும் அதேபோல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading