ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேவரா’. இந்த படம் அவரது திரைப்படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படமாக சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘தேவரா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தேவரா-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் கொரட்டல்ல சிவா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் ஆகியோர், ‘தேவரா-2’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதல் பாகமான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்த ஜான்வி கபூர் மற்றும் சைப் அலிகான் ஆகியோர், இந்த இரண்டாம் பாகத்திலும் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாக வெளியாகியுள்ளது.
