ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்… தொடரும் இழுபறி!

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள இறுதித் திரைப்படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகை வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வெளியாகாமல் தள்ளிப் போனது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனவரி 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.

அதன்படி, இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், “ஜனநாயகன் திரைப்படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப் பிரச்சினைகளை உருவாக்கும் வகையிலான வசனங்கள் மற்றும் காட்சிகள் உள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி புகார் அளித்துள்ளார். மத அடையாளங்களை அவமதிக்கும் வகையிலான விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கில், தணிக்கை வாரியத்திற்கு தனி நீதிபதி போதிய கால அவகாசம் வழங்கவில்லை. எனவே, இந்த வழக்கை தனி நீதிபதி பி.டி. ஆஷா மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை விரைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர்.

மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்ற அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தனி நீதிபதி பி.டி. ஆஷா வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தணிக்கை வாரியத்திற்கு உரிய அவகாசம் வழங்கி அதன் பின்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். நடிகர் விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதால், அந்த அடிப்படையிலும் படத்தின் வெளியீட்டில் கூடுதல் சிக்கல்கள் உருவாகலாம். எனவே, தேர்தலுக்கு முன் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டு படம் வெளியாகுமா என்பது தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading