இனி பாடல் பாட மாட்டேன்… பிரபல நடிகர் அர்ஜித் சிங் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், மராத்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 700-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, இந்திய திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் பின்னணிப் பாடகர் அரிஜித் சிங். 2011 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் தொடர்ந்து பாடி வரும் அவர், தனது மென்மையான குரலும் உணர்வுப்பூர்வமான பாடல்களும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் இனிமேல் பின்னணி பாடல்களைப் பாடமாட்டேன் என திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக என்னை கேட்டு, எனக்கு அளவற்ற அன்பு வழங்கிய அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனிமேல் பின்னணிப் பாடகராக எந்த புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இதனை இங்கேயே நிறுத்துகிறேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு அற்புதமான பயணமாக இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த எதிர்பாராத அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சி மற்றும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அரிஜித் சிங் பல இனிமையான மற்றும் மனதைத் தொடும் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ‘புகழ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடடா என்ன அழகு…’ என்ற பாடல் மூலம் அவர் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதன் பின்னர் ‘24’ திரைப்படத்தில் ‘நான் உன் அழகினிலே…’ என்ற பாடலையும் பாடினார். இந்த பாடல் யூடியூப் தளத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த பாடலை அரிஜித்துடன் இணைந்து பாடிய பாடகி சின்மயி, அவரைப் பற்றி கூறுகையில், “பிரிதம் சாருக்காக என் பாடலை பதிவு செய்தபோது அரிஜித் சிங்கை முதன்முறையாக சந்தித்தேன். அப்போது ‘பாலிவுட்டை நீ இன்னும் ஆளவில்லை’ என்று அவரிடம் சொன்னது நினைவில் இருக்கிறது. அது ‘தும் ஹி ஹோ’ பாடல் வெளியாகும் முன்பான காலம். அவர் மிகப்பெரிய புகழ் பெற்ற பிறகும் அவருடன் சில முறை பாடியுள்ளேன், ஆனால் அவரில் எதுவும் மாறவில்லை. அவர் எனக்கு பிடித்த இசைக்கலைஞர்களில் ஒருவரும், பாடகர்களில் ஒருவரும், நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவருமாவார். ஆன்மிக ரீதியாக உயர்ந்த மனிதர் என்றும் தைரியமாகச் சொல்லலாம். அவர் எப்போதும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்படுபவர்; அவர் எதிர்காலத்தில் எதற்காக இசையைத் தேர்வு செய்தாலும், அது தெய்வீகத்திற்குச் சமமானதாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார். 38 வயதிலேயே பாடல்களை விட்டு விலகும் முடிவை அரிஜித் ஏன் எடுத்தார் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading