தென்னிந்திய சினிமா மட்டுமே இன்னும் மண்வாசனை மாறாமல் உள்ளது – நடிகர் பிரகாஷ்ராஜ்!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய இலக்கியத் திருவிழா, நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் மற்றும் இன்றைய இந்தி சினிமா குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது, “பாலிவுட் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. இன்றைய இந்தி திரைப்படங்கள் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. அவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும், ஆனால் அதில் உயிர் இல்லை” என்று கூறினார். மேலும், “இன்றைய இந்தி சினிமாக்கள் வெறும் ஆடம்பரமான செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலமாக பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக வைத்துள்ளன. அவற்றில் கதைக்கும், உணர்வுகளுக்கும் இடமில்லை” என்றும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவைப் பற்றி பேசுகையில், “தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை பாருங்கள். அவை இன்னும் மண்ணின் வாசனையோடு இருக்கின்றன. சாமானிய மக்களின் வாழ்க்கையையும், சமூகப் பிரச்சினைகளையும் தைரியமாக பேசுகின்றன. ஜெய் பீம், மாமன்னன் போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காக குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது. நமது கதைகள் நமது வேர்களைப் பற்றி பேச வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் மேற்பரப்பான கவர்ச்சியை மட்டுமே நம்பினால், மக்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்” என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading