திரையுலக பிரபலங்களை சமூக வலைதளங்களில் ‘டிரோல்’ செய்வது சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக முன்னணி கதாநாயகிகள் இந்த பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளிவரும் போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். ஆனால், டிரோல் செய்பவர்களுக்கு பதில் அளிப்பதால் எந்த பயனும் இல்லை. பொய்களை பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “பொய்யான வதந்திகளைப் பார்த்து, ‘இது உண்மையில்லை’ என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதிலளித்தால், அவர்களை மேலும் ஊக்குவிப்பது போல ஆகிவிடும். அதை நான் ஏன் செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, “சிலர் பணத்திற்காகவே பொய்யான பிரசாரங்களை செய்கிறார்கள். நான் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறேன். சினிமாவிற்கு வந்தபோது எப்படி இருந்தேனோ, அதேபோல தான் இன்றும் இருக்கிறேன். முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று ராஷ்மிகா மந்தனா தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார்.
