‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன், இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘அய்யோ காதலே’ பாடல் வெளியான உடனேயே ரசிகர்களிடையே வைரலாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வித் லவ்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ‘வித் லவ்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினர். அப்போது சென்சார் வாரியம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பதிலளித்தார். அவர் பேசுகையில், “எங்கள் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற சென்சார் வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளோம். சென்சார் வாரியம் இருப்பதற்கான காரணம் தெளிவாக உள்ளது. எந்த வகை ரசிகர்களுக்கு எந்த வகையான படங்களை காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அமைப்பாகவே சென்சார் வாரியம் செயல்படுகிறது.
சென்சார் வாரியம் மதிக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு என்று நான் நினைக்கிறேன். இது புதிதாக உருவான அமைப்பு அல்ல. இந்தியாவில் திரைப்படங்கள் சென்சார் வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இதற்கு மேல் பேச விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
