தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ் சினிமாவிலும் ‘சிங்கம்’, ‘மன்மதன் அம்பு’, ‘வெடி’, ‘சாமி ஸ்கொயர்’, ‘சச்சின்’, ‘வில்லு’, ‘வீரம்’, ‘கங்குவா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்த பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. இதேபோல், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ‘குபேரா’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடிய பாடலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக திரையுலகில் அறிமுகமாக உள்ளார். வேணு யெல்டாண்டி இதற்கு முன் ‘பாலகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘எல்லம்மா’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தாமே இசையமைத்து வருகிறார் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
