மதுரை பாலமேடு பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்திற்கு வருகை தந்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக நடிகர் சூரி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜல்லிக்கட்டு கலாச்சாரம் ஒரு கட்டத்தில் இடையில் குறையக்கூடிய சூழல் உருவானது. ஆனால் தற்போது அது மீண்டும் எழுச்சி பெற்று, சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பாலமேடு ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு திரைப்படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூரி, “நிச்சயமாக நடிப்பேன். அதுபோன்ற சிறந்த கதை கிடைத்தால், ஜல்லிக்கட்டு வீரர்களோடு ஒரு வீரராகவே நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
