சினிமாவை அரசியல் கோணத்துடன் பார்க்க கூடாது – கவிஞர் வைரமுத்து!

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,  பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், கடந்த 5-ம் தேதி அந்தப் படத்தை மறுஆய்வு குழுவிற்கு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து, இப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவிற்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்வதாகவும், இப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால், ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைநிறுத்தி, படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், வரும் ஜனவரி 20ம் தேதி இந்த வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதன் காரணமாக ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்சார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சினிமாவை ஒரு கலையாகவே பார்க்க வேண்டும், அரசியல் கோணத்தில் பார்க்கக் கூடாது என்றும், முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து தணிக்கைத் துறையுடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து படங்களுக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர விதிமுறைகளை வகுத்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading