வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பி.ஜே. கிஷோர் தயாரிப்பில், இயக்குநர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பூஜை மற்றும் ஆரம்ப பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்வில், படக்குழுவினருடன் சேர்ந்து இயக்குநர்கள் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பல ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீண்டு வரும் மகன், தன் தாயை காப்பாற்றுவதற்காக, அவள் வாழ்ந்த 1990-களின் உலகத்தை தன் நண்பர்களின் உதவியுடன் மீண்டும் உருவாக்குகிறான். அந்த உலகத்தில் நடைபெறும் குழப்பங்களும், நகைச்சுவை சம்பவங்களுமே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது. முழுக்க காமெடி மற்றும் எமோஷன் கலந்த கதையாக இந்த படம் உருவாகவுள்ளது. இதில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற உள்ளது. படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் பேசுகையில், “நான் லண்டனில் உள்ள ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்த பிறகு, சென்னையில் இயக்குநர் அஹ்மத்திடம் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் பணியாற்றினேன். இன்றைய காலகட்டத்தில் ஆக்ஷன் படங்கள் அதிகமாக வெளியாகும் நிலையில், ரசிகர்கள் காமெடி படங்களை பார்க்க ஆவலாக உள்ளனர்.

எனக்கும் காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான், இந்த படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் வகையில் உருவாக்கியுள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னென்ன செய்கிறான் என்பதே படத்தின் மையக் கருத்து. எமோஷனல் கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும் அளவுக்கு சொல்ல முயற்சி செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading