யூடியூப் தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி, பின்னர் பாரிஸ் ஜெயராஜ், பிளாக் மெயில், என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனது இடத்தைப் பிடித்தார். அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், நடிகையாக தனது பயணம் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: “நான் முன்பாக பிவிஆர் நிறுவனத்தில் சேல்ஸ் பெண்ணாக பணியாற்றி வந்தேன். அந்த காலகட்டத்தில் சில புதிய வாய்ப்புகள் என்னைத் தேடி வரத் தொடங்கின. அப்போது, இந்த வேலையில் தொடர்வதற்குப் பதிலாக, என்னை நாடி வரும் வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்தலாமே என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். அதன் பின்னர் அந்த வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தேன். ஆனால், அது கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலமாக இருந்ததால், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து செயல்பாடுகளும் முற்றிலுமாக முடங்கிப் போயின.
ஆரம்பம் முதலே எனக்கு மீடியா துறையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம்தான் மிகவும் சவாலான அந்த காலகட்டத்திலும் எனக்கு தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியது. அந்த நேரத்தில் நாங்கள் இணைந்து யூடியூபில் லாக்டவுன் சீரிஸ் என்ற தொடர் நிகழ்ச்சியை உருவாக்கினோம். அந்த முயற்சிதான் என்னை நடிகையாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, திரைத்துறையில் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கித் தந்தது” என்று தேஜூ அஸ்வினி தெரிவித்துள்ளார்.
—
