Advertisement

சிறிய பட்ஜெட் படங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன – இயக்குனர் வசந்தபாலன் வேதனை!

தமிழில் ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’, ‘அநீதி’ உள்ளிட்ட பல முக்கியமான தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன், சமீபத்தில் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் திரைத்துறையில் நிலவும் கடுமையான சூழலை குறித்து வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய மற்றும் மத்திம நாயகர்களுக்கும், புதிய அலை இயக்குநர்களுக்கும் இன்று திரையரங்குகள் கிடைப்பதில்லை என்றும், ஓடிடி தளங்களிலும் இடம் இல்லை என்றும், தொலைக்காட்சி சேனல்களும் ஆதரவு தருவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு திரைப்படத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு கோடம்பாக்கம் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டிய நிலை உருவாகி விட்டதாகவும், சினிமாவை விட்டு ஓட ஓட விரட்டப்படுகிறார்கள் என்றும், முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பெரிய கதாநாயகர்களுக்கும் மட்டுமே எல்லா வாய்ப்புகளும் திறக்கப்படுகின்றன என்றால், இந்தத் துறையில் ஜனநாயகம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, தரமான திரைக்கதை ஆகியவற்றுக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லை; அவை வெறும் பேச்சாக மட்டுமே மிஞ்சுகின்றன என்றும் வசந்தபாலன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும், பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களையும் மட்டுமே வாங்குவோம், மற்றவர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்ற நிலைப்பாட்டை நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களும், தொலைக்காட்சி சேனல்களும், திரையரங்குகளும் எடுத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், சொந்த நாட்டிலேயே அகதியாக நிற்பது போன்ற சூழல் உருவாகி இருப்பதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக படம் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இயக்கினாலும் அதை எங்கு விற்க வேண்டும், யாரிடம் சென்று கையேந்த வேண்டும், யார் அந்தப் படத்தை வாங்குவார்கள், எந்த திரையரங்கில் வெளியாகும் என்றே தெரியாத பரிதாபமான நிலை நிலவுகிறது என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தனக்கு மட்டுமல்ல, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலையும் இதே தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நெட்பிளிக்ஸ் புதிய படங்களையும், சிறிய படங்களையும், நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரத்தை இணையத்தில் தேடிப் பார்த்தாலே உண்மை புரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சிறிய தயாரிப்பாளராகவும், தேசிய விருது பெற்ற இயக்குநராகவும், நெட்பிளிக்ஸின் செயல்பாடுகளுக்கு தனது ஆழ்ந்த கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்றும் வசந்தபாலன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply