தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணிபுரியும் மதுசந்தரன் (குஞ்சாக்கோ போபன்), கணவரைப் பிரிந்து மகளுடன் வாழும் ஆனியை (அனு சித்தாரா) காதலிக்கிறார். மகள் ஹன்னா மதுசந்தரன் மீது அதிக பாசம் காட்டுவதால், ஆனியும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். திருமணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், உடற்கூறாய்வுத் துறையில் பணியாற்றிய சுஹாசினி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மதுசந்தரன் கலந்துகொள்கிறார். முன்பு தனக்கு ஓட்டுநராகப் பணியாற்றிய அவரை சுஹாசினி பாராட்டுகிறார். இதைக் கவனிக்கும் இரண்டு காவலர்கள் மதுசந்தரனைப் பின்தொடர்ந்து வந்து, அவர் மீது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிபியின் (சுராஜ்) மகள் மரியாவை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் அல்லது இறந்திருந்தால் உடலை ஒப்படைக்க வேண்டும் என்பதே மனுவின் கோரிக்கை. மரியாவின் உறவுமுறை சகோதரியான எலீனா மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தான் மரியாவைக் கடத்தவில்லை என மதுசந்தரன் மறுத்தாலும், யாரும் அவரை நம்புவதில்லை. இதனால் 45 நாட்களுக்குள் தனது நிரபராதித்தனத்தை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். ஆனியும் அவரைச் சந்தேகப்படுவதால் திருமணம் தடைபடுகிறது. மரியாவுக்கு என்ன நடந்தது, உண்மையான குற்றவாளி யார் என்பதை மதுசந்தரன் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘ராக்கெட்ரி’ படங்களில் பணியாற்றிய விஷ்ணு ரவிகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜி.ஆர். இந்துகோபன் கதையை எழுத, மார்ட்டின் பிரகத் மற்றும் நீரஜ் ராஜன் திரைக்கதை அமைத்துள்ளனர். 2003-ல் கடத்தப்பட்ட 9 வயது சிறுமிக்கு என்ன ஆனது, குற்றம்சாட்டப்பட்டவர் உண்மையிலேயே கடத்தினாரா, தனது நிரபராதித்தனத்தை எப்படிக் நிரூபித்தார் என்ற கதையை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
குஞ்சாக்கோ போபன் மீது புகார் அளிக்கப்படும் இடத்திலிருந்து படம் வேகமெடுக்கிறது. சில சம்பவங்கள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்த, அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் இடைவேளை வரை கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. இவர்தான் குற்றவாளி என நினைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து, கிளைமாக்ஸ் வரை கதையை யூகிக்க முடியாத வகையில் கொண்டு செல்கின்றன. விசாரணையின்போது காவலர்கள் நாயகனுக்குத் தடையாக இருப்பதும், ஒரு கட்டத்தில் குஞ்சாக்கோ போபன் ஆவேசமாகச் சண்டையிடுவதும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சண்டைக்காட்சி, அதைத் தொடர்ந்து வரும் துரத்தல் மற்றும் மற்றொரு ஆக்ஷன் காட்சி ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன. திரைக்கதையை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றதில் இயக்குநர் விஷ்ணு ரவிகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
மது கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் கச்சிதமாக நடித்துள்ளார். சுராஜுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும், ஹக்கிம் ஷாஜகான் தனது பார்வையாலேயே மிரட்டுகிறார். அனு சித்தாரா, வினய் போர்ட், ஜெகதீஷ், சுஹாசினி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ராபி வர்கீஸின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை, விஷ்ணு சுஜாதனின் ஒலி வடிவமைப்பு ஆகியவை படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. கிங்சனின் கலை இயக்கமும், சந்தோஷின் சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளன.
