2019 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற ரொமான்டிக் திரில்லர் திரைப்படமாக ‘இஷ்க்’ அமைந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதையை அடிப்படையாக கொண்டு தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ரீமேக் படத்தை ‘ஜீரோ’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஷிவ் மோஹா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்து வருகிறார்.
இந்த தமிழ்ப் பதிப்புக்கு ‘ஆசை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல், நடிகை பூர்ணா, லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதையின் முக்கியமான திருப்பங்களை இந்தக் கதாபாத்திரங்கள் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரேவா இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவை பாபு குமார் மேற்கொண்டு வருகிறார். படத்தொகுப்புப் பணிகளை சுதர்சன் செய்து வருகிறார். இந்நிலையில், ‘ஆசை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மார்ச் 6ம் தேதி ரிலீஸாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
