கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘டோரதி’ திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டிருந்தது. தன்னை ஒரு பெண்ணாக உணரும் சனந்த் இதைக் குடும்பத்தினரிடம் தெரிவிக்க, அவர்கள் அவரைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அங்கிருந்து தப்பிக்கும் சனந்த் குஜராத்துக்குச் செல்கிறார். குடும்பத்தின் கௌரவத்திற்காக அவரைக் கொலை செய்யும் பொறுப்பை ஏற்று ரிஷிகாந்தும் அங்கு செல்கிறார்.
திரையரங்கப் பதிப்பில், குஜராத்தில் சந்திக்கும் இருவரும் உணர்வுபூர்வமாக முத்தமிட்டுக் கொள்வதுடன் படம் முடிவடைகிறது. ஆனால், முதலில் புரூஸ் லீ பாணியிலான சண்டைக் காட்சியுடன் வேறொரு கிளைமாக்ஸ் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், எடிட்டிங்கிற்குப் பிறகு முத்தக் காட்சியே சிறந்த முடிவாக இருக்கும் எனக் கருதி மாற்றியதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், படத்திலிருந்து நீக்கப்பட்ட சுமார் 5 நிமிடக் காட்சியை கார்த்திக் சுப்பராஜ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சனந்தைக் கொலை செய்யும் திட்டத்துடன் ரிஷிகாந்த் விஷம் கலந்த பரோட்டாவை வாங்கி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நீக்கப்பட்ட காட்சி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
