நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறை தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இது அவரது இசைப்பயணத்தில் 100வது திரைப்படமாக அமைந்துள்ளது. ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், மொழி உணர்வையும் சமூக விழிப்புணர்வையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிக்காக பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, அந்த காலகட்டத்தின் அரசியல் மற்றும் மாணவர் இயக்கங்களை நேர்மையாக சித்தரித்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று ‘பராசக்தி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா பேசுகையில், “என்னுடைய நடனத்திற்கும், பாடல்களுக்குமான பாராட்டுகள் வருவது எனக்கு ஏற்கனவே பழகிவிட்ட விஷயம். ஆனால் ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம், நான் நடித்த கதாபாத்திரத்திற்கே முதல்முறையாக பாராட்டுகள் கிடைக்கின்றன. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச் சரியான அறிமுகப் படமாக அமைந்துள்ளதாக நினைக்கிறேன். இதனால் நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
