‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘ஹாட் ஸ்பாட்’ என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். ஒரே திரைப்படத்தில் நான்கு விதமான கதைக்களங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், தனித்துவமான முயற்சியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படத்தை கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
